ஞாயிறு, 20 மே, 2012

ராஜ தரிசனம்

ராஜ தரிசனம்


மனமும் அதில் தோன்றும் எண்ணங்களும் நிலையற்றவை என்பது எத்தனை உண்மையான சொல்!! நேற்று காலையில் தமிழ்நாடு மின்சார வாரியத்தை சபித்த அதே மனம் தான் மாலையில் அதற்க்கு நன்றி கூறியது!

நேற்று காலை எங்கள் ஊரில் வழக்கம் போல் எந்த முன்னறிவிப்புமின்றி மாதாந்திர பராமரிப்பு பணிக்கு முழுநாள் மின்தடை ஏற்ப்பட்டது. வெளியே 110 டிகிரி சுட்டெரிக்கும் வெயில், குளிர்சாதனமோ,மின்விசிரியோ வேலை செய்யாத நிலையில் என் கிளினிக்கினுள் அவிந்து கொண்டிருந்தேன். எப்படியோ பல்லை கடித்துக் கொண்டு சிலர் பற்க்களை வெறியுடன் பிடுங்கிக் கொண்டிருந்தேன், இப்படியே போனால் பல்லுக்கு பதில் யார் நாக்கையாவது பிடுங்கி விடுவேனோ என்ற பயம் ஏற்ப்பட தொடங்கியது! எனவே பிற்பகலில் கிளினிக்கை மூடிவிட்டு திருவண்ணாமலைக்கு பேருந்தில் புறப்பட்டேன்.

அங்கே நல்லவேளையாக ஒரு குளிரூட்டப்பட்ட திரையரங்கில் ஸ்ரீ ராமராஜ்யம் படம் ஓடிக்கொண்டிருந்தது! படத்துக்கு மொத்தமாக வந்திருந்த 15 பேரில் நானும் ஒருவனாக அமர்ந்தேன். ஸ்ரீ ராம காவியத்தைக் காண ஒரு முஸ்லீம் குடும்பமே வந்திருந்ததைப் பார்க்க மிக மகிழ்சியாக இருந்தது! படத்துக்கு  ஸ்ரீ ராஜ ராஜ்யம் என்று பெயரிட்டிருந்தால் மிக பொருத்தமாய் இருந்திருக்கும். படத்தின் கதையில் எனக்கு சில கருத்து வேறுபாடுகள் இருந்த போதிலும், ராஜாவின் பிரம்மாண்டம் அவற்றை எல்லாம் புறம் தள்ளி விடுகிறது! ஒரு மிகச் சிறந்த விருந்து உண்ட களிப்பில் மாலையில் திரையரங்கை விட்டு வெளியேறி, இப்படியே வீடு திரும்பலாமா என்று யோசித்து, பிறகு இவ்வளவு தூரம் வந்தாயிற்று ரமணதரிசனம் கண்டு திரும்புவோம் என்றெண்ணி சிறுநடையில் ஸ்ரீ ரமணாஸ்ரமம் வந்தடைந்தேன்.

ரமணாஸ்ரமத்தில் கூட்டம் குறைவாகவே இருந்தது. காற்றில் சற்று ஈரப்பதம் அதிகரித்திருந்ததால் அங்கிருந்த மயிலொன்று தன்னை மறந்து தோகை விரித்தாடிக் கொண்டிருந்தது. உள்சென்று கோடி கண்கள் கொண்டாலும் காணக் கிடைக்காத பெருமானை கண்ணாற தரிசித்து மனதார வேண்டி நின்றேன். பிறகு சமாதி அருகில் இருக்கும் தியான அறையில் ரமணர் வீற்றிருந்த ஆசணத்தின் எதிரே அவரின் நிழற்படத்தை பார்த்தபடி அமர்ந்து கண்மூடி தியானிக்கலானேன்.மனதிற்க்குள் ராஜா பிட்சைபாத்திரம் பாடத்துவங்கினார். மனமெங்கும் அந்த பாடல் ஒலிக்க, அந்த ஆனந்த பெருவெளியில் தூக்கம் என்றோ மயக்கம் என்றோ சொல்ல இயலாத ஒரு நிலையில் அறைமணி நேரம் கடந்தும் அமர்ந்திருந்தேன். அந்த நேரத்திலும் தூரத்தில் எங்கேயோ ராஜா மனமுருக ரமணரைப் பாடிக்கொண்டிருந்தார். ஆனால் இந்த பாடல் நான் முன்பெப்போதும் கேட்டிறாத பாடல். அந்த சிந்தனை என்னை மெல்ல சுயஉணர்வுக்கு கொண்டு வந்தபோது உணர்ந்தேன் பாடல் என் மனதில் ஒலிக்கவில்லை என் காதுகளில் ஒலித்துக் கொண்டிருந்த்து! சில வினாடிகளில் பிரக்ஞை பெற்று நான் பதறி எழுந்ததில் என் அருகில் அமர்ந்திருந்த சிலரின் தியானமும் கலைந்தது.

துறித நடையில் ரமண சமாதி அருகே சென்றால் அங்கே நான் ஒரு அதிசயம் கண்டேன்! வெண்பஞ்சு பொதிக்குள் சூரியன் ஒன்று மனமுருக பாடி அந்த இடத்தை குளிர்வித்துக் கொண்டிருந்தது! மிகச்சிறியக் கூட்டத்தினுள் எளிதாக அவருக்கு மிக அருகாமையில் சென்று நின்று கொண்டேன். பாமாலை முடிந்து இறைவனுக்கு பூமாலை சூட்டிக் கொண்டிருந்தபோது நான் என் கைபேசியில் இருந்த கேமிரா மூலம் அவறை பின்னிருந்து பதிவு செய்தேன். அந்த அமைதி பெருவெளியில் என் கிளிக் சத்தம் சற்று உரக்கவே ஒலித்தது. அப்போது ராஜாவின் முகம் ஒரு வினாடி மாறியதைக் கண்டதும் என் சப்த நாடியும் ஒரு நிமிடம் அடங்கியது. அர்ச்சகர் தந்த பிரசாதம் பெற்றுக் கொண்டு சமாதியை சுற்றி வந்தார், நான் மெல்ல அவரை பின் தொடர்ந்தேன். வரிசையில் சுண்டல் பிரசாதம் வழங்கிக் கொண்டிருந்தனர் அங்கே வரிசையில் நின்று பிரசாதம் பெற்று வாயில் போட்டுக் கொண்டார். அருகில் இருந்த குழாயில் கைகழுவி வந்தபோது ஒரு நடுத்தர வயது தெலுங்கு பெண்மணி அவரருகே சென்று “நீரு இளையராஜா காறு அண்டி”!? என்று உலகத்தில் யாருக்குமே தெரியாத கேள்வியொன்றை உதிர்த்தார். ம்!...என்று கூறி சிறு இடைவெளி விட்டு SO WHAT…!!? என்றார். அதற்க்கு மேல் அந்த பெண்மணியால் ஒன்றும் பேசமுடியவில்லை. மீண்டும் சமாதி அருகே சென்று கும்பிட்டு அவர் வெளிவருவதற்கு முன்பு அவர் வெளிவரும் பாதை சென்று நின்று கொண்டேன். அவர் என்னருகே வ்ரும்போது இரு கைகூப்பி வணங்கினேன், பதிலுக்கு இரு கைகூப்பி வணங்கி சிறு புண்முறுவலிட்டார். யாரோ ஒருவர் கைய்யெழுத்து கேட்டார், அதை மறுத்து மெல்ல நடந்து அவர் அறைக்கு சென்று விட்டார்.

அவர் அருகே நின்றபோது என் வாய் அமைதியாக இருந்தாலும் என் மனம் கட்டுக்கடங்காமல் மிக சத்தமாக கூக்குறலிட்டுக் கொண்டிருந்தது. “ஐயா! இதோ இந்த கூட்டதில் இருப்பவர்களை விட உங்களின் மேம்பட்ட ரசிகன் நான்! இவர்கள் கேட்க்கும் சாதாரண[!!!] பாடல்களை விட அறிதான பாடல்களையே நான் கேட்ப்பேன், பாடுவேன்! உங்களின் மேடை நிகழ்ச்சிகளை தவறாது நேரில் வந்து ரசிப்பவன் நான்! நவராத்திரிக்கு உஙள் வீட்டுக்கு வந்துள்ளேன் நான்! இணையத்தில் எப்பொதும் உங்களைப் பற்றியே பேசிக் கொண்டிருப்பேன்....!!! ஒரு நிமிடம் இந்த மனம் தான் எவ்வளவு அபத்தமான சிந்தனைகளை மேற்க்கொள்கிறது! “பொய் மெய்யாகும் நான் எனும் அகந்தை...!?

நான் யார்பால ரமணனுக்கு இதே இடத்தில் உதித்த சிந்தனை சற்று மாறுபட்ட கோணத்தில் எனக்கும் அங்கே தோன்றியது! அவரின் ரசிகர்களெனும் ஆழியில் அலைபோல, அலை தனில் நுரைபோல, நுரைதனில் துளி போன்ற ரசிகனல்லவா நான்! அவரிடம் பேச வாய்ப்பு கிடைத்திருந்தால் கூட என்னால் என்ன பேசியிருக்க முடியும்!? “நீங்கள் நன்றாக இசை அமைக்கிறீர்கள் என்றா!!??அவரிடம் பேசுவதற்க்கு இதை விட அபத்தமான வார்த்தை ஏதேனும் உண்டா!?. இந்த கண்களால் அவரை தரிசித்தேனே, இரு கைகூப்பி வணங்கினேனே! அது போதாதா இந்த ஜென்மத்திற்க்கு!

“கோடி கோடி ரசிகர்களில் நான் தான் கடைகோடி ஐயா!!என்று பாடிய படி, வழியெல்லாம் பலத்த மழையில் நனைந்த படி வீடு திரும்பினேன்! மின்சாரம் வந்திருந்து என் மனதைப் போல வீடும் பிரகாசித்திருந்தது! அப்போது தான் தமிழ்நாடு மின்சார வாரியத்திற்க்கு மனதாற நன்றி கூறினேன்!







2 கருத்துகள்:

  1. அழகான பதிவு, ஸ்ரீதர்! எழுதுவது முதல் முறை என்று நீங்கள் சொன்னாலும், எழுத்தில் உங்களுக்குள்ள வல்லமையை உங்களுடைய சில சிந்தைமிகு வாசகங்களைப் படித்ததன் மூலமும் நம்முடைய கருத்துச்செறிவுள்ள உரையாடல்களின் மூலமும் நீண்ட நாட்களுக்கு முன்பே அறிந்து கொண்டவன் நான். எனவே, வலைப்பதிவு ஒன்றைத் தொடங்கி ஒரு முழுக்கட்டுரையாக ஒரு அருமையான அனுபவத்தை எழுதி அதனை முறையாக ஊடகத்தில் வெளியிட்டது இன்று தான் முதல் முறை என்று வேண்டுமானால் நீங்கள் சொல்லிக் கொள்ளலாம்! மற்றபடி, நீங்கள் எப்போதோ எழுத்தாளர் தான் - சந்தேகமில்லாமல்!

    உங்கள் எழுத்தின் நடை பெரிய பெரிய தத்துவங்களை மிகச் சாதாரணமான சொற்களில் சொல்வதாக அமைந்து அனைவரும் புரிந்துகொள்ளும் வகையில் எளிமையாக இருப்பது பாராட்டத்தக்கது. தமிழில் தட்டச்சு செய்யும் போது நிகழும் சந்திப்பிழைகளை மட்டும் கொஞ்சம் சரிபார்த்துக் கொள்ளுங்கள். இது ஒன்றைத் தவிர குறை என்று எதுவும் எனக்குத் தெரியவில்லை. மேலும், நான் முன்பு சொன்னதைப் போல், ஒரு கலைப்படைப்பில் நிறை குறை என்பதை எப்படி நிர்ணயிப்பது? மாறாக, நான் எதனை ஏற்றுக் கொள்கிறேன், எதனை விலக்க விரும்புகிறேன் என்று பட்டியல்களின் பெயர்களை மாற்றுவது உத்தமம்!

    தொடர்ந்து எழுதுங்கள்! உங்கள் எழுத்தைப் படித்து ஒவ்வொரு இடுகைக்கும் அன்றன்றே பின்னூட்டமிட ஆசைப்படுகிறேன்!

    பதிலளிநீக்கு